லண்டன் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசியதற்காக பாஜக உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி பேசுகையில், “பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் என் தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மட்டுமன்றி எதிர்க்கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறைகள் சுதந்திரமாக செயல்பட வில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். இதையடுத்து ராகுலின் பேச்சை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு மண்ணில் சலசலப்பை ஏற்படுத்துகிறார். பெகாசஸ் அவரது மனதில்தான் உள்ளது. அவரது தொலைபேசியில் இல்லை. காங்கிரஸும் அதன் தலைவர்களும் நாட்டை இழிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு மண்ணில் இது போன்று செயல்படுகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெகாசஸ் விவகாரத்தில், பலமுறை அதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு அதற்கு பதிலளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. ராகுல் காந்தி சொன்னது போல் பல தலைவர்கள் இதன் (பெகாசஸ்) மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், "இன்று நம் நாடு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் அறிந்திருப்பதால் இப்படியான தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் மிகவும் சாத்தியமான ஒன்றுதான். அவரது (ராகுல் காந்தி) போன் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையை பேசுபவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.