அகிலேஷ் யாதவ் - அனுராக் தாக்கூர் - ராகுல் காந்தி புதிய தலைமுறை
இந்தியா

''சாதி தெரியாதவர் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா?'' - மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்சு

மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவகாரத்தில் பாரதிய ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய வார்த்தைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.

PT WEB

மக்களவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்காந்தி பேசினார். அப்போது பாரதிய ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூர், “சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகின்றனர்” என ராகுல்காந்தியை நோக்கிக் கூறினார்.

அனுராக் தாக்கூர் Vs ராகுல் காந்தி

பாஜக எம்பியின் சாதி குறித்த பேச்சு, அவையில் கடும் கண்டனங்களை எழுப்பியது. இதையடுத்து, தன்னை எத்தனை அவமதித்தாலும், சாதிவாரி கணக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சாதியைக் கொண்டு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்த நினைப்பதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டிவரும் நிலையில் இந்த வாக்குவாதம் நேரிட்டது. இதேபோல, அனுராக் தாக்கூருக்கும், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே அக்னிபத் திட்டத்தை முன்வைத்து வாக்குவாதம் நேரிட்டது.

அனுராக் தாக்கூர் Vs அகிலேஷ் யாதவ்

அப்போது அனுராக் தாக்கூர், “நான் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியிருக்கிறேன். எனக்கு யாரும் உபதேசிக்க வேண்டாம். ராகுல்காந்தியின் அருகே உட்கார்ந்திருப்பதால் நாடு முழுவதும் வதந்திகளையும் பொய்களையும் அகிலேஷ் பரப்புகிறார்” என விமர்சித்தார். இதனால் அவையில் கடுமையான கூச்சல் எழுந்தது.