இந்தியா

ஆரியன்கான் வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லையா? - லஞ்ச ஒழிப்புத் துறை கொடுத்த பரிந்துரை!

ஆரியன்கான் வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லையா? - லஞ்ச ஒழிப்புத் துறை கொடுத்த பரிந்துரை!

webteam

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் தொடர்பான வழக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தாத மும்பை மண்டல இயக்குனர் உட்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் "ரேவ் பார்ட்டி" நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு மும்பை பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரிரில் அதிகாரிகள் ரகசிய ஆப்ரேசன் நடத்தியதில் ஆர்யன் கான் உட்பட பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஆரியன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிறகு 2021 அக்டோபர் 30ம் தேதி ஜாமீனில் ஆரியன் கான் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே, பல கோடி ரூபாய் பணம் கேட்டு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக ஆடியோ வெளியான நிலையில் வழக்கு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை மேற்கொண்டு நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த சமீர் வான்கடே தலைமையிலான குழு 65 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ஆனால் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மட்டும் குறிவைக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 7-8 போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீதும் அவர்களின் நடத்தை மீதும் சந்தேகம் உள்ளது எனவும் ஆரியன் கான் வழக்கை முறையாக அதிகாரிகள் விசாரிக்கவில்லை என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் மற்றும் 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சஒழிப்பு துறை பரிந்துரைத்துள்ளது.

- நிரஞ்சன் குமார்