இந்தியா

இனி மாட்டிறைச்சி கிடைப்பது சந்தேகமே! - கர்நாடக கால்நடை மசோதா 2020 சொல்வது என்ன?

இனி மாட்டிறைச்சி கிடைப்பது சந்தேகமே! - கர்நாடக கால்நடை மசோதா 2020 சொல்வது என்ன?

webteam

கர்நாடக கால்நடை படுகொலைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா 2020 குரல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அம்மாநில சட்டமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. விதிகள் கடுமையாக்கப்பட்டதால், கர்நாடகாவில் இனி மாட்டிறைச்சி கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோதும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால், அவர்களில் பலர் மசோதாவின் நகல்களை சட்டமன்றத்தில் கிழித்து எறிந்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், குரல் வாக்குகள் மூலம் மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியது.

புதிய சட்டத்தின் கீழ், 13 வயதுக்கு மேற்பட்ட ஆண் அல்லது பெண் எருமைகளை மட்டுமே இனி கர்நாடகாவில் இறைச்சிக்காக வெட்ட முடியும். மேலும் பசு மாடு, ஒரு பசுவின் கன்று, காளை, காளை படுகொலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் மாட்டிறைச்சி இனி மாநிலத்தில் கிடைக்காது என்பதும், 13 வயதுக்கு மேற்பட்ட எருமை இறைச்சி மட்டுமே விற்க முடியும் என்பதுமேயாகும். இந்த விதியை மீறினால் அபராதம், ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை மற்றும் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதே சட்டம், படுகொலைகளின் நோக்கத்திற்காக கால்நடைகள் விற்கப்படுவது, வாங்கப்படுவது அல்லது அப்புறப்படுத்தப்படுவதற்கு "நம்புவதற்கான காரணம்" அடிப்படையில் தேடவும் கைப்பற்றவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

முந்தைய கர்நாடக பசு வதை மற்றும் கால்நடை பாதுகாப்பு சட்டம், 1964, மாடுகள் மற்றும் கன்றுக்குட்டியை படுகொலை செய்ய தடை விதித்தது. இருப்பினும், பழைய சட்டம் காளை, காளை, எருமை (ஆண் அல்லது பெண்) 12 வயதுக்கு மேற்பட்டவையாக இருந்தால் படுகொலை செய்ய அனுமதித்திருந்தது. ஆனால் இனி எருமை மாடுகளை மட்டுமே வெட்ட முடியும். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, புதிய கால்நடை எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற பெரிய விலங்குகளுக்கு மாட்டிறைச்சியை உணவளிக்கும் விதமாக சட்டத்திலிருந்து விலக்கு கோரியுள்ளன. விலங்குகளின் உடல்நலன் காரணமாக இந்த விலக்கை உயிரியல் பூங்காக்கள் கோரியுள்ளன.