அலிகர் நகரத்தில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் அப்பகுதியில் இணையசேவை நிறுத்தப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் உபர்கோட் பகுதியில் போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெண்களை அகற்ற அலிகர் காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியின்போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் காவல்துறையினர் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ஆகவே வன்முறைக்காரர்களை அப்புறப்படுத்தவும் கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தினரை வெளியேற்றவும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
மாலை வேளையில் நகரத்தின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவியதால் அதனையொட்டி வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக உபர்கோட் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெண்கள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கிளர்ச்சியடைந்த பெண்களை அகற்ற காவல்துறையினர் விரைவான அதிரடி படையுடன் சம்பவ இடத்தை அடைந்தனர், ஆனால் வன்முறை எதிர்வினைகளை சந்தித்தனர்.
போராட்டக்காரர்களின் கல் வீச்சில் அதிரடி படையின் வானங்கள் சேதமடைந்ததுடன், போலீஸ் தடுப்புகளும் தீ வைக்கப்பட்டன. ஆகவே கும்பலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகினர். ஆனால் வன்முறை வேகமாக பாபர் மண்டி, காஸ் கி மண்டி மற்றும் ஷாஹீத் சந்தன் சாலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உபர்கோட் பகுதியில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டன. இந்தப் பகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது காவல்துறையினர்
துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்படவில்லை.
கலவரத்தை அடுத்து மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அலிகர் பகுதியை சுற்றியுள்ள இணையச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டி.எம்.அலிகர் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தரப்பிரதேச ஃபாரூகாபாத் தொகுதி மக்களவை உறுப்பினர் சந்திர பூஷண் சிங் தெரிவித்துள்ளார்.