மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இது போதாத காலம் போல. அவரின் அமைச்சரவையில் அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி நேற்று மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து அதிரடியாக விலகினார். கடந்த ஒன்றரை மாதங்களில் திரிணாமுல் அரசாங்கத்திலிருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் இவர். இதற்கு முன் சுவேந்து ஆதிகரி மற்றும் லக்ஷ்மிரதன் சுக்லா ஆகியோர் தங்கள் பதவியை துறந்து, அதில் சுவேந்து ஆதிகரி பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
பதறவைக்கும் பாஜக!
பீகார் வெற்றிக்குப் பிறகு பாஜக டார்கெட் செய்திருப்பது மேற்குவங்கம். இன்னும் ஒருசில மாதங்களில் மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஏற்கனவே மம்தா பானர்ஜி வலுவான நிலையில் இருக்கிறார். இதனால் அவரை எதிர்த்து இந்த முறை வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்க்க தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் செய்ததுபோலவே மேற்குவங்கத்தில் தனது பிளான்களை கச்சிதமாக முடித்துவருகிறது. இதற்காக பாஜக மத்திய தலைமை `மிஷன் பெங்கால்' திட்டத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, 11 கொண்ட ஒரு முக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பெரும்பாலான மத்திய தலைவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் ஒரு அட்டாக் கொடுக்க வேண்டும் என்பதே இந்த 11 பேருக்கும் பாஜக தலைமை கொடுத்திருக்கும் அசைன்மென்ட். அதற்கேற்பவே இவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
பாஜகவின் அதிரடி ஆக்சன்களில் முக்கியமானது மற்ற கட்சியில் உள்ள அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் கட்சியில் இணைத்து கொள்வது. இதற்கு இதுவரை மேற்குவங்க திரிணாமுல் தலைவர்கள் பலர் இரையாகி வருகின்றனர். திரிணாமுல் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவியுள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர்தான் ராஜீப் பானர்ஜி.
யார் இந்த ராஜீப் பானர்ஜி?!
2011 சட்டமன்றத் தேர்தலில், ஹவுரா மாவட்டத்தின் டோம்ஜூர் தொகுதியில் இருந்து ராஜீப் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, மாநில நீர்ப்பாசன மற்றும் நீர்வழி அமைச்சராக நியமிக்கப்பட்டார் ராஜீப். 2016 இல், அவர் அந்த பதவியை தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும், 2018ல் மம்தா செய்த அமைச்சரவை மறுசீரமைப்பில், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக மீண்டும் பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை ராஜீப்புக்கு கொடுக்கப்பட்டது. சில மாதங்கள் கூட அது நீட்டிக்கவில்லை.
2019 பொதுத் தேர்தலில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடங்களை மக்களவை தேர்தலில் பாஜகவிடம் இழந்தது திரிணாமுல். இதன்காரணமாக, ராஜீப்பை அந்த துறையில் இருந்து நீக்கிவிட்டு வனத்துறை அமைச்சராக்கினார் மம்தா. `சைலன்ட் டைப்' நபராக அறியப்பட்ட இந்த ராஜீப், மம்தா பானர்ஜி அமைச்சரவையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்களில் ஒருவராக வலம்வந்தவர். ஹவுரா மாவட்டத்தின் கிராமப்புறங்களில் கட்சியின் விவகாரங்களுக்கும் பொறுப்பாளராக இருந்த அவர், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல்லின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஹவுரா மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற இடங்களுக்கு மேல் செல்வாக்கு செலுத்திய அவர் மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்தார். கடந்த மாதம் பாஜகவுக்கு தாவிய சுவேந்து ஆதிகரியைப் போல், எந்த மோசடி செயல்களிலும் ராஜீப் பெயர் இடம்பெறவில்லை. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. எனினும் கடந்த சில மாதங்களாக கட்சிக்கு எதிராக பேசத் தொடங்கினார்.
தனது கட்சியைச் சேர்ந்த சக தலைவர்கள் சிலர் மீது பேஸ்புக்கில் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் ராஜீப் பானர்ஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். "நான் மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன், ஒரு சில தலைவர்கள் எனது பணியில் தடைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் என் வார்த்தைகளை பொய்யாகக் குறிக்கின்றனர். உயர்மட்ட தலைமை இந்த தலைவர்களிடம் எதுவும் சொல்லாதபோது நான் வருத்தப்படுகிறேன்" என்று பகிரங்கமாக கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே கட்சித் தலைமை அவரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கிடையே, இவருக்கும் பாஜக வலை விரித்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த ரகசிய சந்திப்பில் பாஜக தலைவர்கள் சிலர், ராஜீப்பிடம் பேசியுள்ளனர் மேற்குவங்க ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. அதேபோல் இன்னும் சிலர் `இனினும் திரிணாமுல்லில் இருந்து நேரத்தை வேண்டாம்' என அவருக்கு பகிரங்க அழைப்பு விடுத்தனர். இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த சில நாட்களில் ராஜீப் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே, ராஜீப் ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரங்களில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ பைசாலி டால்மியா கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். மறைந்த கிரிக்கெட் நிர்வாகி ஜக்மோகன் டால்மியாவின் மகள்தான் இந்த பைசாலி. 2016 ல் டி.எம்.சியில் சேர்ந்த இவர் அதே ஆண்டு தேர்தலில் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பாலி தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ராஜீப் ராஜினாமா குறித்து, ``அவர் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது கட்சிக்கும் மக்களுக்கும் பெரும் இழப்பாகும். ஹவுரா மாவட்டத்தில், தலைமையின் ஒரு பகுதியிலிருந்து நாங்கள் பல அவமதிப்புகளை எதிர்கொண்டோம்" என்று கூறினார் பைசாலி. இந்தக் கருத்துக்கு சில மணி நேரத்துக்கு பின் கூடிய திரிணாமுல் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு பைசாலியை அதிரடியாக கட்சியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தது.
டிசம்பர் முதல், சுவேந்து ஆதிகரி உட்பட ஒன்பது திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதுபோல் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ.யில் இருந்து தலா ஒரு எம்.எல்.ஏ, ஒரு திரிணாமுல் எம்.பி., மற்றும் முன்னாள் திரிணாமுல் எம்.பி. ஆகியோரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். லக்ஷ்மி ரத்தன் சுக்லா அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். ராஜீப் பானர்ஜி இந்த மாத இறுதியில் பாஜகவில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 30 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் மேற்குவங்கம் வர இருக்கிறார். அவர் முன்னிலையில், திரிணாமுல் கட்சியை சேர்ந்த இன்னும் சிலர் ராஜீப்புடன் சேர்ந்து பாஜகவில் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து நடக்கும் டுவிஸ்ட்களால் மேற்குவங்க அரசியல் களமும், மம்தாவும், திரிணாமுல் கட்சியும் கலக்கமடைந்துள்ளார்கள் என்பது மறுப்பதற்கில்லை.