இந்தியா

சாதனை படைத்த மேலும் மூவர்: மின்னல் வேகத்தில் அதிரடி காட்டும் கம்பாளா வீரர்கள்!

சாதனை படைத்த மேலும் மூவர்: மின்னல் வேகத்தில் அதிரடி காட்டும் கம்பாளா வீரர்கள்!

webteam

கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் 3 கம்பாளா பந்தய வீரர்கள் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடியுள்ளதாக கம்பாளா நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அதிலும் ஒருவர் 100 மீட்டர் தூரத்தை 9.51 வினாடிகளிலேயே கடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கம்பாளா என்ற பாரம்பரிய விளையாட்டு, ஆண்டுதோறும் கர்நாடகாவில் நடத்தப்பட்டு வருகிறது. நீர் நிரப்பப்பட்ட விளை நிலத்தில் இரண்டு எருமைக‌ளை இழுத்துப் பிடித்தவாறு 142 மீட்டர் தூரம் ஓடுவதே இந்த விளையாட்டு. சமீபத்தில் சீனிவாச கவுடா என்ற இளைஞர் கம்பாளா பந்தய தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்ததாகவும், அதனை 100 மீட்டர் தூர ஓட்டமாக மதிப்பிட்டால் 9.55 வினாடிகளில் கடந்ததற்கு சமம் என கூறப்பட்டது. உலக சாதனை படைத்த உசைன் போல்ட்டே, 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் கடந்திருந்தார் என்பதால், சீனிவாச கவுடா அதிகம் பேசப்படும் நபராக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு கம்பாளா போட்டியில், சுரேஷ் ஷெட்டி என்ற இளைஞர் சீனிவாச கவுடாவை விட வேகமாக ஓடியுள்ளதாக போட்டி நடத்தியவர்கள் கூறியுள்ளனர். பஜகோலி ஜோகிபெட்டு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர், 100 மீட்டர் தூரத்தை 9.51 வினாடிகளில் கடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

நிஷாந்த் மட்டுமின்றி மேலும் 2 வீரர்களும் 10 வினாடிக்கும் குறைவான வேகத்தில் 100 மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக கூறியுள்‌ளனர். இருவத்தூர் ஆன‌ந்த் மற்றும் அக்கேரி சுரேஷ் ஆகியோர் 9.57 வினாடிகளில் கடந்துள்ளதாக கம்பாளா நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.

இறைக்கப்பட்ட தண்ணீரில் ஓடும்போதே இவ்வளவு வேகமாக ஓடும் இந்த வீரர்கள், முறையான தடகள பயிற்சிகள் பெற்று சர்வதேச போட்டிகளில் களமிறக்கப்பட்டால் பல பதக்கங்களை வெல்வார்கள் என்று விளையாட்டு ஆர்வலர்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் பாரம்பரிய விளையாட்டு வீரர்களை சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிட முடியாது என்றும், ஆனாலும் திறமையானவர்களை கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அவர்களும் ஜொலிப்பார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.