இந்தியா

உடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே மருந்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே மருந்துவமனையில் அனுமதி

webteam

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே உடல்நலக் குறைவால் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தியவர் அன்னா ஹசாரே. இவர் கடந்த 2011 ஆண்டு ஊழலற்ற இந்தியா அமையவேண்டும் என்று கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இதனையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லோக்பால் அமைப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். 

அதற்குப் பிறகு கடந்த 2018ம் ஆண்டு விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி மறுபடியும் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை அமல்படுத்த உறுதியளித்த நிலையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார். 

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் மற்றொரு உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே தொடங்கினார். அந்தப் போராட்டத்தில் மகாரஷ்டிர அரசு விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கவும் லோக் ஆயுக்தாவை அமைக்கவும் வலியுரத்தப்பட்டது. அதன்பின் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையைடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். 

இந்நிலையில் அன்னா ஹசாரே தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்னா ஹசாரேவின் உடல்நிலை மிகவும் சோர்வுடன் இருப்பதாகவும் மற்றும் அவரது மூளைக்கு குறைவாக இரத்த ஓட்டம் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவருடைய உதவியாளர் ஷ்யாம் அசாவா “அன்னா ஹசாரே கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்த ஸ்கேன் அறிக்கையில் அவருக்கு மூளையில் இரத்தம் ஓட்டம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.