இந்தியா

நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்.. மரணத்தை தழுவும் காட்டுயிர்கள்: கேரளாவின் சோகம்!

jagadeesh

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய கர்நாடகா, கேரளா, தமிழகப் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் இருக்கும் காடுகளில் வாழும் உயிரினங்கள் பெரும் உயிர் போராட்டத்தை எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மான் உள்ளிட்ட சில உயிரினங்கள் தப்பிப்பதற்கு இடமில்லாமல் வெள்ளித்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறது. இதுவரை நீலகிரி வெள்ளத்தில் சிக்கி எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கிறது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கரையோரங்களில் விலங்குகளில் உடல் கரை ஒதுங்க தொடங்கி இருக்கிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. இதனால் கேரளாவின் இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் எர்ணாகுளத்தின் நேரியமங்கலம் பகுதியில் புரண்டு ஓடிய ஆற்று வெள்ளத்தில் யானையின் சடலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது காண்போரை கலங்கச் செய்தது.

இதேபோல கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பல அணைகளின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தமிழகத்தின் ஒகனேக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக தாவாங்கரே மாவட்டத்தின் ராஜன்ஹல்லி கிராமத்தில் குரங்குகள் இரண்டு நாட்களாக மரத்திலேயே தங்கி இருக்கிறது. இந்தக் குரங்குகளை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.