இந்தியா

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்! யார் இவர்? முழு விவரம்!

webteam

நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றிய அனுபவமிக்கவர் அனில் சவுகான். இவர் சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக ஓய்வு பெற்றவர். ராணுவத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அனில் சவுகான் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளை சமாளித்த அனுபவத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியின் போது, பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் (2020), உத்தம் யுத் சேவா பதக்கம் (2018), அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் , சேனா பதக்கம் , விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகிய பல பதக்கங்களைப் பெற்றவர் அனில் சவுகான் என்பதும் குறிப்பிடத்தக்கது.