தன்னை துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ததாகவும் குற்றம் சாட்டி துணை கமிஷனர் புஷ்ப வர்தன் மீது விசாகப்பட்டினம் அறநிலையத்துறை உதவி கமிஷனர் சாந்தி மண்ணை வாரி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில், அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சாந்தி திடீரென துணை ஆணையர் புஷ்ப வர்தன் அலுவலகத்திற்குள் நுழைந்து அறையில் இருந்த ஒரு சில சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் மீது மண்ணை வீசினார். கடந்த சில வாரங்களாக புஷ்ப வர்தன் தன்னையும் மற்ற அதிகாரிகளையும் மனரீதியாக துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட கோபத்தின் காரணமாக அதிகாரிகளை பழிவாங்குவதாகவும், பணியிடமாற்றம் செய்வதாகவும், விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் கூறி மிரட்டுவதாக சாந்தி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக பதிலளித்த புஷ்ப வர்தன், " இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. ஜூலை 14 முதல் நான் விசாகப்பட்டினத்தில் இல்லை. நான் யாரிடமும் பேசுவதற்கு கூட வாய்ப்பில்லை, வியாழக்கிழமை தான் அலுவலகத்திற்கு வந்தேன். இன்று அவர் என் அலுவலகத்திற்குள் நுழைந்த சில நொடிகளில் என் மீது மணலை வீசிவிட்டு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னைத் திட்டினார். இது தொடர்பாக சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனரிடம் கோரியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.