ஆந்திராவில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளி மாணவி மீது மின்விசிறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு வகுப்பறையில் திடீரென்று மின்விசிறி கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் மீது விழுந்தது. இதனால் சக மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று அரசு மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தேர்வுக்கு பின்னர் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக உள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் கூறுகையில், ''இது துரதிருஷ்டவசமான சம்பவம். தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பறையிலும் மின்விசிறிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு நடத்தப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஆந்திராவின் கர்னூல் கோனேகண்ட்லாவில் உள்ள மண்டல் பரிஷத் (மேல்நிலை) உருது பள்ளியில் வகுப்பின் போது ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் ஒரு இறக்கை கழன்று விழுந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவங்களை தொடர்ந்து அரசு நடத்தும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகள் மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
இதையும் படிக்க: திருப்பதியில் 5 வயது சிறுவன் கடத்தல்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை