ஆந்திரா இளைஞர் எக்ஸ் தளம்
இந்தியா

ஆந்திரா| குழந்தைகளைப் படிக்கவைக்க கிட்னியை விற்ற தந்தை.. மோசடிக் கும்பலிடம் ஏமாந்த கொடூரம்!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது கிட்னியை விற்று குழந்தைகளைப் படிக்கவைக்க நினைத்தார். ஆனால், கிட்னியை வாங்கிய கும்பல், அவருக்கு பணத்தைத் தராமல் ஏமாற்றியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

’பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பார் ஒளவைப் பாட்டி. காரணம், கல்வி செல்வமே ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கடன் வாங்கியாவது படிக்க வைக்கின்றனர். அதிலும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது கிட்னியை விற்று குழந்தைகளைப் படிக்கவைக்க நினைத்தார்.

ஆனால், கிட்னியை வாங்கிய கும்பல், அவருக்கு பணத்தைத் தராமல் ஏமாற்றியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் மதுபாபு கர்லபதி. 31 வயதான அவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவருடைய வருமானம் போதாமல் அவ்வப்போது குடும்ப செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கியுள்ளார். இதனால் அவரது கடன் தொகை அதிகமாகியுள்ளது. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் அவர் தவித்தபோதுதான் ஃபேஸ்புக்கில், ’கிட்னி விற்றால் பணம் தருகிறோம்’ என்ற விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். மேலும் அதில், ஒரு கிட்னி கொடுத்தால் ரூ.30 லட்சம் தருவதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க: கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

இதனால் கிட்னி விற்கும் முடிவு வந்த அவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பாஷா என்ற ஏஜெண்டை முதலில் சந்தித்துள்ளார். அவரும் பணத்திற்கு உறுதியளித்துள்ளார். இருந்தாலும் அவர் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

அப்போது விஜயவாடாவில் இருந்து பெண் ஒருவர் தன்னை மதுபாபுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தானும் இதுபோல கிட்னியை கொடுத்ததாகவும் ஆபரேஷனுக்கு பிறகே சொன்னபடியே பணம் தனக்கு வந்துவிட்டதாகவும் கூறி அவரை நம்ப வைத்துள்ளார்.

இதனால், அந்தக் கும்பலை முழுவதுமாக நம்பியுள்ளார் மதுபாபு. அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே உடனடியாக கிட்னி தேவைப்படுவதாகச் சொல்லி விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு கிட்னி எடுக்கப்பட்டுள்ளது. ஆபரேஷனுக்கு முன்பாக, கிட்னி பெற விரும்பும் குடும்பத்தினரையே நேரடியாக மதுபாபுவிடமும் பேச வைத்துள்ளனர். இதன்பிறகு மதுபாபு ஆபரேஷன் செய்துள்ளார்.

அதன்பிறகு நிச்சயம் 30 லட்ச ரூபாயை ஒரே தவணையில் கொடுப்போம் என உறுதியளித்துள்ளனர். ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு வெறும் ரூ. 50,000 மட்டுமே கொடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: INDvZIM|பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் அபாரம்; 3வது டி20 போட்டியில் புதிய சாதனையுடன் இந்தியா வெற்றி

இதுகுறித்து மதுபாபு, "எனக்குக் கடன் இருப்பது அவர்களுக்குத் தெரியும். இதனால் என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். கிட்னி தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதாகவே சொல்லி என்னையும் நம்ப வைத்தனர். எனக்கும் ரூ.30 லட்சம் பணம் தருவதாக உறுதியளித்தனர்.

இந்த பணம் எனது கடனை திருப்பி செலுத்தவும் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரவும் உதவும் என்றே நான் நம்பினேன். இதை வைத்து குழந்தைகளை படிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். இதன் காரணமாகவே அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டார்கள்" எனத் தெரிவித்திருப்பதுடன், போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த விசாரணையில், உறவினர்கள் தான் கொடுக்க முடியும் என்பதால், மதுபாபுவுக்கும், கிட்னி பெற்றவரின் குடும்பத்துக்கும் இடையே போலியான உறவை ஏற்படுத்த போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு