ஆந்திர பஸ் எக்ஸ் தளம்
இந்தியா

மனைவியைக் காண அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர்.. ஆந்திராவில் அரங்கேறிய விநோத சம்பவம்!

ஆந்திராவில் மனைவியைக் காண்பதற்காக, டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை லாரி ஓட்டுநர் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் வேங்கடபூர் பகுதியைச் சேர்ந்தவர் துர்க்கையா. லாரி ஓட்டுநரான இவர், சம்பவத்தன்று இரவில் தனது மனைவியைக் காணச் சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், நந்திகோட்கூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் ஏறி அதனை ஓட்டிச் சென்றுள்ளார். சில மணி நேரத்திலேயே பேருந்து மாயாமானது குறித்த தகவலறிந்த பணிமனை அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முச்சுமர்ரி பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. உடனடியாக அங்குசென்ற காவல்துறை அதிகாரிகள் பேருந்தை மீட்டதுடன், லாரி ஓட்டுநர் துர்க்கையாவை கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னிடம் செலவுக்கு பணம் இல்லாததால் மனைவியை காண வேறு வழியின்றி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!