காவலர் - மின் வாரிய ஊழியர் புதிய தலைமுறை
இந்தியா

ஹெல்மெட் அணியாத மின் ஊழியருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்.. காத்திருந்த அதிர்ச்சி!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த போலீஸை பழிவாங்க, மின் இணைப்பை துண்டித்த லைன்மேனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக மின்சார வாரியத்தைச் சேர்ந்த உமா என்பவர் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.

அவரைத் தடுத்து நிறுத்திய பாப்பையா, போக்குவரத்து விதியை மீறியதற்காக மின்வாரிய ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்தார். இதனால் ஆவேசமடைந்த மின்வாரிய ஊழியரான உமா, பார்வதிபுரத்தில் உள்ள காவல் உதவி மையத்திற்கு சென்று, ‘நான் யார் தெரியுமா, எனக்கே அபராதம் போடுறீங்களா’ எனக் கேட்டு சத்தமாகப் பேசியுள்ளார்.

பின்னர் அதே வேகத்துடன் அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை சரிசெய்தனர். மேலும், இது தொடர்பாக உமாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாப்பையா,

“ ‘மின்சார பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கிறீர்களே... எவ்வளவு தைரியம்’ என்று அவர் எங்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து உதவி மையத்தின் மின் இணைப்பை துண்டிப்பதாக அச்சுறுத்தினார். அவரிடம் போக்குவரத்து விதிகள் பற்றி விளக்கினேன். அவர் கேட்கவில்லை. பின்னர், எங்களின் போக்குவரத்து உதவி மையத்தின் மின் இணைப்பைத் துண்டித்தார். இருப்பினும், மின்சாரம் பின்னர் சரிசெய்யப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.