ஜெகன் மோகன், ஷர்மிளா எக்ஸ் தளம்
இந்தியா

சகோதரன் பற்றிப் பேசியபோது கண்ணீர்விட்ட ஷர்மிளா | ஜெகன் மோகனுக்கு தொடரும் சிக்கல்.. பின்னணி என்ன?

ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரிக்கும் இடையேயான குடும்பச் சொத்துப் பிரச்னை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

ஆந்திரா | ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் முற்றும் மோதல்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரியும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டிக்கும் இடையேயான குடும்பச் சொத்துப் பிரச்னை அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியோடு இணைந்து பயணித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, அதன்பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிலும் ஜெகன் மோகன் முதல்வராக இருந்த சமயத்தில், இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் உச்சம் தொட்டது.

அதைத் தொடர்ந்து சகோதரரிடமிருந்து பிரிந்த அவர், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்து அதன் தலைவரானார். அடுத்து, அதையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். என்றாலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவருக்குமான மோதல் நீறுபூத்த நெருப்பாகவே கனன்றுகொண்டிருக்கிறது. அது, தற்போது சொத்து தகராறுமூலம் மேலும் வெடித்துள்ளது. குடும்பச் சொத்துகளை பிரிப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது.

இதையும் படிக்க: NZ Vs IND | தொடரை இழந்த இந்திய அணி... நியூசிலாந்து ஆட்டம் குறித்து விமர்சித்த சச்சின்!

ஜெகனுக்கு கடிதம் எழுதிய ஷர்மிளா

சரஸ்வதி பவர் நிறுவனத்தில், தனக்கும், தன் மனைவி பாரதிக்கும் உள்ள பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் ஜெகன் மோகன் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், குடும்பச் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக மறைந்த தமது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டி, ஷர்மிளா, ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘தான் வாழ்நாளில் பெற்ற சொத்துகள் அனைத்தையும் பேரக் குழந்தைகளுக்கு சமமாகப் பங்கிட வேண்டும் என்று என் தந்தை வெளிப்படையாக அறிவுறுத்தனார். இதற்கு ஜெகன் முதலில் ஒப்புக்கொண்ட நிலையில், ஆனால் பின்னர் இதனை ஏற்க மறுத்து, சொத்துகளை சமமாக பங்கிடவில்லை. ஜெகனுக்கும் எனக்கும் இடையேயான கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெகன் நிறைவேற்றத் தவறிவிட்டார். ஜெகன் தற்போது சொல்லும் விஷயம் எமது தந்தையின் விருப்பத்திற்கு எதிரானது’ என குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் அதில், ’மறைந்த ஒய்.எஸ்.ஆரின் வீடு, சாக்‌ஷியில் 40 சதவீதம், பாரதி சிமெண்ட்ஸில் 49 சதவீதம், சரஸ்வதி பவரில் 100 சதவீதம், ஏலகங்கா சொத்தில் 100 சதவீதம் என்னுடைய பங்காகும். அவரை, (ஜெகன் மோகன்) விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதை மறுத்ததால் சரஸ்வதி பவர் நிறுவனத்தில் மோசடியாக பங்குகளை எடுத்ததாகக் கூறி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் தன்மீதும், தன் தாய்மீதும் வழக்கு தொடர்ந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளாக இருந்தும் ஒரு சொத்துகூட எனக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும், அதை நான் வெளிப்படுத்தவில்லை. கஷ்டங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும் சட்டத்தின் கதவுகளைத் தட்டவில்லை. ஒய்.எஸ்.ஆரின் கண்ணியத்தை நிலைநாட்ட கடுமையாக முயற்சித்தேன்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 2025 IPL: CSK-வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தோனி..? உற்சாகமாகும் ரசிகர்கள்!

வீடியோவில் கண்கலங்கிய ஷர்மிளா

இந்த நிலையில், சொத்து தொடர்பாக தனது சகோதரர் குறித்து பேசியபோது ஷர்மிளா கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அவர், “நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல தியாகங்கள் செய்துள்ளேன். பாதயாத்திரையின் போது அர்ப்பணிப்போடு நடந்துகொண்டேன். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் என்னுடைய அம்மாவைப்போல நானும் அயராது உழைத்தேன்.

வெற்றிக்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு என்ன செய்திருக்கிறார். அவர் எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் அநீதி இழைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நான் 4 சுவருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றார். இது நியாயமா? எங்கள் தந்தைக்குச் சொந்தமான சொத்துகள் எங்கள் தந்தையின் விருப்பப்படியே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீதி வெல்லும்” என தெரிவித்தபோது, கண்ணீர்விட்டு அழுதார்.

ஏற்கெனவே ஆளுங்கட்சி, ஜெகனுக்கு தொடர்ந்து குடைச்சலைக் கொடுத்துவரும் நிலையில், ஷர்மிளாவின் இந்த நெருக்கடியும் அவருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க; மீண்டும் குப்பை பலூன்கள்.. ஆனால் உள்ளே இருந்தது? | தென்கொரியாவை நூதன முறையில் பழிவாங்கிய வடகொரியா!