ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளம்
இந்தியா

”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்” - ஜெகன் மோகன் ரெட்டி போர்க்கொடி!

Prakash J

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, அதன்படியே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதன்படி, தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக தன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

இந்த நிலையில், சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதைத் தொடர்ந்து மீண்டும் மின்னணு இயந்திரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முக்கியமாக, உலகப் பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ளப்படும் சிறிய முறைகேடும் (ஹேக்கிங்) மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: T20 WC | வெளியேறிய பாகிஸ்தான்.. நாடு திரும்ப அச்சம்.. ஒரு மாதத்திற்கு எஸ்கேப் ஆகும் 5 வீரர்கள்!

இந்த கருத்து இந்திய அளவில் மீண்டும் எதிர்க்கட்சிகளிடம் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன; வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும். வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!