அனிதா, பவன் கல்யாண் எக்ஸ் தளம்
இந்தியா

“சரியில்லை எனில், அந்த துறையையும் நானே ஏற்பேன்” - உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பவன் கல்யாண்!

“மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லாவிடில் உள்துறையையும் நானே ஏற்பேன்” என துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளார்.

இந்த நிலையில், “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லாவிடில் உள்துறையையும் நானே ஏற்பேன்” என பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அனிதாவை வெளிப்படையாக விமர்சித்துள்ள அவர், தனது கடமைகளில் இருந்த அனிதா தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பவன் கல்யாண்

இதுகுறித்து அவர், “நீங்கள்தான் (அனிதா) உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். உங்கள் பணியை சிறப்பாகச் செய்யுங்கள், இல்லாவிட்டால் உள்துறையையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்போல நீங்கள் இருக்க வேண்டும். நாம் யோகி ஆதித்யநாத்போல் இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மாற மாட்டார்கள். எனவே, நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை அமல்படுத்திய விதத்தில் செயல்படுத்த வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

அனிதா

மேலும் அவர், “நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆனால் எனது நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் அல்லது அதைப் பற்றி அவமரியாதையாகப் பேசுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | விலகிய மராத்தா சமூகத் தலைவர்.. பின்னணி காரணம் என்ன?