video image x page
இந்தியா

ஜூனியர்களை படுக்கவைத்து தாக்கும் சீனியர் மாணவர்கள்| வைரலான வீடியோவால் ஆந்திர அரசியலில் பரபரப்பு!

Prakash J

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில் ஆந்திராவின் ஸ்ரீசுப்பராய மற்றும் நாராயணா கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அறை ஒன்றில் 6 மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கப்படுகின்றனர். அதாவது, ஒவ்வொரு மாணரும் குப்புற படுக்கிறார். அவரைச் சுற்றியிருக்கும் 4 மாணவர்கள் மாறிமாறி குச்சியால் தாக்குகின்றனர். இப்படி, 6 மாணவர்கள் அடிவாங்குவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சி இந்த வீடியோவைப் பகிர்ந்து ஆளும் கட்சியின் சட்டம் - ஒழுங்கு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இதற்கு ஆளும் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிக்க: எல்லை தாண்டிய காதல் | காதலரை மணமுடிக்க போலி ஆவணத்தில் பாக். சென்ற இந்தியப் பெண்; விசாரணையில் அம்பலம்

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அனிதா வாங்கல்புடி, “YSRCP பொய்களைப் பரப்புவதையும், அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதையும் தவிர்ப்பது நல்லது. YSRC கட்சி அடிக்கடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. சட்டம் - ஒழுங்கை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறோம். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ள அவர், இந்தச் சம்பவமே YSRC கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதை போலீஸும் உறுதி செய்துள்ளது. அதாவது, இந்தச் சம்பவம் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்துள்ளது. என்.சி.சி அல்லது நேஷனல் கேடட் கார்ப்ஸ் பயிற்சிக்காக அவர்கள் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இதில் 2 மாணவர்கள் பலத்த காயமுற்றுள்ளனர். மேலும், அந்தச் சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தந்தால் மீண்டும் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்பதாலேயே புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது YSRC கட்சிதான் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது அது திட்டமிட்டு பரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: விபத்தில் இறந்த காதலர்.. வித்தியாசமான முடிவெடுத்த காதலி.. தைவானில் நடந்த ருசிகர சம்பவம்!