சந்திரபாபு நாயுடு முகநூல்
இந்தியா

ஹை-டெக் முதல்வர்... அரசியலில் ராஜதந்திரி... யார் இந்த சந்திரபாபு நாயுடு?

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள சூழலில், யார் இந்த சந்திரபாபு நாயுடு என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

PT WEB

ஹை டெக் முதல்வர்... இந்த வார்த்தை உருவாக காரணமாக இருந்தவரும், இந்த வார்த்தைக்கு பொருத்தமானவரும் இவர்தான். இனி முதல்வராகிவிட்டு தான் சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என்று கண்ணீர் சிந்தி சபதம் ஏற்றவரும் இவர்தான். சூளுரைத்தபடியே ஆந்திராவில் இன்று அரியணை ஏறியுள்ளார் சந்திரபாபு நாயுடு. இவரை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

ஆந்திராவின் கிங் மேக்கர்... அரசியலில் ராஜதந்திரி... மதிநுட்பம் மிக்கவர்... ஆந்திர முதல்வர் அரியணையில் அதிக நாட்கள் நீடித்தவர்... அதாவது 1995 முதல் 2004 வரையிலான 3,378 நாள்கள்... பின்னர் 10 ஆண்டு கால காத்திருப்பைத் தொடர்ந்து, 2014 ல் மீண்டும் அரியணை ஏறியவர்... அரசியல் புத்திசாலித்தனத்தால் கலகக்காரர் என்றும் பேர் போனவர்... இன்று மீண்டும் முதல்வர்... இத்தனைக்கும் சொந்தக்காரரின் பெயர்...

சந்திரபாபு நாயுடு!

கைது செய்தது ஜெகன்மோகன் ரெட்டி அரசு! கண்ணீர் சிந்தி சூளுரைத்த சந்திரபாபு!

இவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில்தான் ஹைடெக் நகரமானது ஹைதராபாத். ஹைடெக் முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. கடந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவே சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரைக்கு புறப்பட்டபோது, 2019 செப்டம்பரில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். திறன்மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு செய்ததாக, சந்திரபாபுவை கைது செய்தது ஜெகன்மோகன் ரெட்டி அரசு.

அசுர பலத்துடன் இருந்த YSR காங்கிரசால், சட்டப்பேரவையில் அவமதிக்கப்பட்டதால், “இனி முதல்வராகிவிட்டுதான் இங்கே நுழைவேன்” என்று கண்ணீர் சிந்தி சூளுரைத்தார். “2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், இதுதான் எனக்கு கடைசி தேர்தல்” என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

யார் இந்த சந்திரபாபு நாயுடு?

சித்தூர் அருகே நரவரப்பள்ளிதான் சொந்த ஊர். அடுத்த நாள் சாப்பாட்டுக்கே வழியில்லாத மிக எளிய குடும்பம். ஒரு தம்பி, 2 தங்கைகள். படிப்பு ஒரு புறம், சந்தைக்குச் சென்று கரும்பு விற்பது ஒருபுறம் என்ற நிலை. இன்னமும் நரவரப்பள்ளியில்தான் சங்கராந்தி கொண்டாடுகிறார் சந்திரபாபு நாயுடு. திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற போது, நடந்த மாணவர் தேர்தலில், அரசியல் பலம் வாய்ந்த பணக்கார மாணவருக்கு எதிராக, தனது நண்பரை நிறுத்தி, வெற்றி பெற வைத்த சூத்திரதாரி.

அரசியல் பயணம்!

28 ஆவது வயதிலேயே, அதாவது 1978 ஆம் ஆண்டில், சந்திரகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றியை ருசித்தவர். அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் மண்ணைக் கவ்வினார். அந்தக் கட்சி, தெலுங்கு திரையுலக சக்கரவர்த்தி என்.டி. ராமாராவின் கட்சி. என்டிஆரின் தீவிர ரசிகரான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் ஜெயகிருஷ்ணாவின் அன்பைப் பெற்று, என்.டி.ஆரின் அறிமுகத்தைப் பெற்று, அவரது மருமகனும் ஆனார்.!

தெலுங்கு தேசத்தில் பயணம்!

தென்னிந்தியாவில் தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சுறுத்தலுக்கு ஆளான கட்சி தெலுங்கு தேசம்தான். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து கட்சியைக் கவசமாக காத்தது, சந்திரபாபுவின் 'மூணு பவுண்ட் மூளை'. 1984-ஆம் ஆண்டு என்.டி.ஆர். அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரது நிதியமைச்சர் பாஸ்கர் ராவை பகடைக்காயாக்கி, காய் நகர்த்தினார்.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாஸ்கர் ராவ் முதலமைச்சர் ஆனார். தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற களமிறங்கிய சந்திரபாபு நாயுடு, 160 எம்எல்ஏக்களை திரட்டி, வைஸ்ராய் ஹோட்டலில் தங்க வைத்தார். அவர்களுக்கு என்.டி.ஆர். நடித்த திரைப்படங்களை அடுத்தடுத்து திரையிட்டுக் காட்டி மனதை மாற்றி, என்.டி.ஆர். ஊர் திரும்பியதும், அவருக்கே ஆதரவளிக்க வைத்தார்... "வந்து சேரும் சிக்கலை பாதிப்பாகப் பார்க்காதே.., வாய்ப்பாகப் பார்" என்பதுதான், சந்திரபாபுவின் மதிநுட்பம்.

பின்னாட்களில் லட்சுமி சிவபார்வதி, தெலுங்கு தேசத்தை ஆட்டிப்படைக்க முற்பட்டபோது, இதே ஸ்டைலில் தான் ஹோட்டலில் பத்திரப்படுத்தினார் நாயுடு. என்.டி.ஆரே நேரில் பேசியும் பலனின்றி போனது.

கட்சி சந்திரபாபு வசமானது. நரவரப்பள்ளியில் பட்டாசுகள் வெடித்தன. அடுத்த தேர்தல் முடிவில், 1995 செப்டம்பர் 10 ஆம் தேதி "சந்திரபாபு நாயுடு அனே நேனு" என்று பதவிப்பிரமாணம் வாசித்தார் நாயுடு. அடுத்தடுத்து 2 முறை முதல்வர் ஆனார். தற்போது 4-வது முறை முதல்வராகி இருக்கிறார்!