இந்தியா

'அதிக விலை' - அதானி நிறுவனத்துடனான நிலக்கரி டெண்டர்களை ரத்து செய்தது ஆந்திர அரசு

'அதிக விலை' - அதானி நிறுவனத்துடனான நிலக்கரி டெண்டர்களை ரத்து செய்தது ஆந்திர அரசு

Veeramani

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திர பிரதேச அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய 2 டெண்டர்களுக்கு ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டுமே பங்கேற்றிருந்தது. 7லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தைவிட அதிக விலையை நிர்ணயித்திருந்தது. இதனால் 2 டெண்டர்களும் அதானி நிறுவனத்திற்கு சென்ற நிலையில், நிலக்கரிக்கான விலையை அதிகமாக நிர்ணயித்திருந்த கூறி டெண்டர்களை ஆந்திர அரசு ரத்து செய்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



நிலக்கரி கொள்முதலுக்கான டெண்டர்களை விலை உயர்வை காரணம்காட்டி ரத்து செய்வது கடந்த சில ஆண்டுகளில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி வணிக நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், 5 லட்சம் டன் நிலக்கரியை டன் ஒன்றுக்கு 40ஆயிரம் ரூபாய் என கடந்த மாதம் விலை நிர்ணயித்துள்ளது. அதேநேரத்தில் ஜனவரி மாதம் டன் ஒன்றுக்கு 17ஆயிரத்து 480 ரூபாய் என அந்நிறுவனம் விலை நிர்ணயித்திருந்ததாக ஆந்திர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



இதுதொடர்பாக விளக்கம் கேட்க அதானி மற்றும் அகர்வால் நிறுவனங்களை தொடர்புகொண்டபோது எந்த பதிலும் தரப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.