மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு pt web
இந்தியா

வரலாறு காணாத மழை: கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா

PT WEB

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த மூன்று நாட்களாக கன மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.

2009க்கு பிறகு கிருஷ்ணா ஆற்றில் தற்போது எட்டு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரயில் போக்குவரத்து பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க ஆந்திர அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து தலா 30 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விஜயவாடா விரைந்துள்ளன. மேலும் இரண்டு மோப்ப நாய்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. நவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மருத்துவ உபகரணங்கள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

விஜயவாடாவின் புடமேரு வாகு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மஹபூபாபாத்தில் நிலைமை மோசமாக உள்ளது. மொகல்ராஜபுரம் பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மிக கனமழை பதிவாகியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மழை வெள்ளம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதே போல் மீட்பு, நிவாரண பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி அதிகாரிகளை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.