இந்தியா

‘வீடு கட்ட நாங்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள் 

‘வீடு கட்ட நாங்கள் இடம் தருகிறோம்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கரம் நீட்டும் விவசாயிகள் 

webteam

ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீடு கட்ட நாங்கள் நிலம் தருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். இதையடுத்து தான் ஆட்சியில் இருக்கும்போதே அந்த வீட்டின் அருகில் சுமார் 5 கோடி செலவில் பிரஜா வேதிகா என்ற மற்றுமொரு புதிய கட்டடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டடம் கட்டும்போதே ஆபத்தான நதிக்கரைக்கு அருகில் கட்டுவதாக அப்போதைய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன் உத்தரவிட்டார். அதன்படி அந்த கட்டடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி அதனை காலி செய்யுமாறு ஆந்திர பிரதேச மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம். எனவே, அவ்வாறு சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசும் வீட்டை காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த நிலையில், சந்திரபாபுவை அவரது வீட்டில் வைத்து விவசாயிகள் சந்தித்து பேசினர். இதில், தலைநகரில் உள்ள கிராமங்களில் வீடு கட்டத் தேவையான நிலத்தை தாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். 

சில விவசாயிகள், தங்களது கிராமத்தில் நாயுடுவுக்கு வீடு கட்டுவதற்கான செலவை ஏற்கவும் தயார் என அறிவித்து உள்ளனர். ‘தலைநகர் பகுதியில் எந்த கிராமத்தில் வசிக்க விரும்புகிறீர்கள் என்பதனை நீங்கள் முடிவு செய்யுங்கள். எங்களது நிதியை கொண்டு உங்களுக்காக வீடு ஒன்றை நாங்கள் கட்டுகிறோம்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.