இந்தியா

'டிராஃபிக் ஜாம் தொல்ல தாங்க முடியல சார்!'-6 வயது சிறுவனின் புகாரால் மிரண்டு போன போலீஸார்!

ஜா. ஜாக்சன் சிங்

தனது பள்ளி சுற்றுப்பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி 6 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பலமனேர் காவல் நிலையம் எப்போதும் போல இன்று காலையும் பரபரப்பாக காணப்பட்டது. பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் விசாரணை, சண்டை சச்சரவு வழக்குகளில் சமரச முயற்சி என போலீஸார் படு பிசியாக இயங்கிக் கொண்டிருக்க, பள்ளிச் சீருடையுடன் 6 வயது சிறுவன் ஒருவன் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழைந்தான்.

முதலில் அங்கிருந்த போலீஸார், சிறுவனை கண்டுகொள்ளவில்லை. புகார் அளிக்க வந்தவர்களில் ஒருவரின் குழந்தையாக இருக்கலாம் என போலீஸார் எண்ணியிருப்பர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இன்ஸ்பெக்டர் அறைக்குள் அந்த சிறுவன் திடீரென நுழைந்தான். இதனை பார்த்த காவலர்கள், அந்த சிறுவனை வெளியே கொண்டு வர முயற்சித்தனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அந்த சிறுவனை உட்கார வைத்து, எதற்காக காவல் நிலையம் வந்திருக்கிறாய், யாருடன் வந்திருக்கிறாய் என மெல்லிய குரலில் கேட்டார். அதற்கு பதிலளித்த சிறுவன், தனது பெயர் கார்த்திக் என்றும், ஒரு புகார் அளிக்க வந்திருப்பதாகவும் கூறினான்.

தொடர்ந்து பேசிய சிறுவன் கார்த்திக், தான் பள்ளிக்கு செல்லும் போது எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும், வழிநெடுக டிராக்டர்கள் நிற்பதும், சாலையில் பள்ளம் தோண்டியிருப்பதுமே இதற்கு காரணம் எனக் கூறியுள்ளான். மேலும், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கூறிய அச்சிறுவன், "வாருங்கள் அந்த இடத்தை இப்போதே காட்டுகிறேன்" என மழலை கொஞ்சும் மொழியில் கூறியிருக்கிறான்.

சிறுவனின் தைரியத்தையும், அவனது தெளிவான பேச்சையும் கண்டு ஆச்சரியம் அடைந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அவனை மனமார பாராட்டினார். பின்னர், போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காண்பதாக சிறுவனிடம் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து, காவலர்கள் இரண்டு பேரை அழைத்து, அந்த சிறுவனை பத்திரமாக பள்ளிக்கூடத்தில் விட்டுவிடுமாறு கூறி அவனை அனுப்பி வைத்தார்.

பிறகு, அந்த சிறுவனிடம் தான் நடத்திய உரையாடலை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.