ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியை விவாகரத்து செய்ய சரியான காரணம் கிடைக்காததால் ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசிமூலம் உடலில் செலுத்தியுள்ளார் கொடூர கணவன்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர்மீது போலீசில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், கர்ப்பவதியான தன்னை திட்டமிட்டு ஒரு போலி மருத்துவரிடம் அழைத்துச்சென்று, உடல்நலத்திற்கு நல்லது எனக்கூறி ஏமாற்றி ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவரது கணவர் பெயர் சரண் எனவும், 40 வயதான அவருக்கு விசாகப்பட்டிணத்தில் 21 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணை திருமணம் முடிக்கும் எண்ணத்தில், தினந்தோறும் தன்னிடம் சண்டையிட்டு வந்ததாகவும், மேலும், வரதட்சணை மற்றும் ஆண் குழந்தையில்லை போன்ற பல காரணங்களைக் கூறி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து பெறுவதற்கான சரியான காரணம் கிடைக்காததால் தன்னை போலி மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியுள்ளார் எனவும், அடுத்தமுறை மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது தனக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகே, தனது கணவரின் சூழ்ச்சி குறித்து தெரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில், தாதேபள்ளி போலீசார் சரணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த கொடூர செயலைப்புரிந்த சரண் மீது இந்திய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகளை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.