இந்தியா

வெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!

வெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!

webteam

ஆந்திராவில் அரசு கொடுக்கும் மானிய விலை வெங்காயத்தை வாங்க வரிசையில் காத்திருந்த ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். 

வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்து வருகிறது. பல மாநிலங்கள் வெங்காயத்தை மானிய விலையில் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றன. அதேவேளையில் அரசு கொடுக்கும் வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் அனைவரும் ஆர்வம் காட்டுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சில இடங்களில் வெங்காயத்தை விநியோகம் செய்பவர்கள் தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் அரசு கொடுக்கும் மானிய விலை வெங்காயத்தை வாங்க வரிசையில் காத்திருந்த ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதியைச் சேர்ந்தவர் சம்பி ரெட்டி. இவர் அப்பகுதி சந்தையில் அரசு வழங்கும் வெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த சம்பி ரெட்டி மயக்க மடைந்து சரிந்து விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். ஏற்கனவே பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

சம்பி ரெட்டியின் உயிரிழப்புக்கு ஆந்திராவில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஆளும் ஜெகன்மோகன் அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு அடிப்படை பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஆந்திர அரசு தோற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.