ஜெகன், விஜயம்மா, ஷர்மிளா எக்ஸ் தளம்
இந்தியா

ஆந்திரா| சொத்து விவகாரம்.. மோதலில் ஜெகன் மோகன், ஷர்மிளா.. தாயார் விஜயம்மாவின் ஆதரவு யாருக்கு?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரியும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டிக்கும் இடையே குடும்பச் சொத்துப் பிரச்னை உள்ள நிலையில் அவர்களது தாயார் விஜயம்மா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Prakash J

குடும்பச் சொத்து| ஜெகன் மோகன் Vs ஷர்மிளா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரியும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டிக்கும் இடையேயான குடும்பச் சொத்துப் பிரச்னை அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பச் சொத்துகளை பிரிப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது.

சரஸ்வதி பவர் நிறுவனத்தில், தனக்கும், தன் மனைவி பாரதிக்கும் உள்ள பங்குகளை, ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றி உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் ஜெகன் மோகன் முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே, குடும்பச் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக மறைந்த தமது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உத்தரவை மீறியதாக குற்றம்சாட்டி, ஷர்மிளா, ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர் அதுதொடர்பாக, கண்ணீர்மல்க பேட்டியும் அளித்திருந்தார்.

தாயார் விஜயம்மா எழுதிய கடிதம்

இந்த நிலையில் அவர்களுடைய தாயாரான விஜயம்மா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஒரு தாயாக, எல்லா குழந்தைகளும் சமம். ஒரு குழந்தைக்கு அநீதி இழைக்கப்படுவது வேதனை அளிக்கிறது. ஒரு தாயாக, அநீதி இழைக்கப்பட்ட குழந்தைக்கு குரல் கொடுப்பது எனது கடமை. குடும்ப விவகாரம் வெளிவருவது எனக்கு ஆழ்ந்த வேதனையாக உள்ளது.

எங்கள் குழந்தைகள் மற்றும் நான் மகிழ்ச்சியான குடும்பமாக இருந்தோம். எங்கள் குடும்பம் ஏன் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைத் தடுக்க நான் முயற்சித்த போதிலும், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் என் கண்களுக்கு முன்பாக விரிவடைகின்றன. தண்ணீரைவிட இரத்தம் தடிமனாக இருக்கிறது. என் பிள்ளைகள் தாங்களாகவே பதிலளிப்பார்கள். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தரும் கடவுளை நான் நம்புகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒடிசா | வலியால் துடித்த கர்ப்பிணி.. விடுமுறை தராத உயரதிகாரி.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

உறுதியளித்த ஜெகன் மோகன் ரெட்டி

தொடர்ந்து அதில், “ஒய்.எஸ்.ஆர் சில சொத்துகளை எனது இளைய மகள் ஷர்மிளா பெயருக்கும், சில சொத்துகளை அவர் உயிருடன் இருக்கும்போது எனது மகன் ஜெகனின் பெயருக்கும் மாற்றியுள்ளார். அது சொத்துகளைப் பிரிப்பது அல்ல. ஒய்.எஸ்.ஆரின் விருப்பம் தன் பிள்ளைகளுக்குச் சமமான பங்கு வேண்டும் என்பதுதான் உண்மை.

எங்கள் சொத்துகளை வளர்க்க ஜெகன் கடுமையாக உழைத்தார். ஆனால், அனைத்து சொத்துகளும் குடும்பத்திற்குச் சொந்தமானது. 2009ல் ஒய்.எஸ்.ஆரின் அகால மரணத்திற்குப் பிறகு, ஜெகனும் ஷர்மிளாவும் 2019 வரை ஒன்றாக வாழ்ந்தனர். ஜெகன், உடன்படிக்கையின்படி ஷர்மிளாவுக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜெகனுக்கு 60%, ஷர்மிளாவுக்கு 40% கிடைக்கும். இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன், ஷர்மிளாவுக்கு சமமான பங்கு இருந்ததால் அவர்கள் சம ஈவுத்தொகையைப் பகிர்ந்துகொண்டனர்.

அதன்பிறகு விஜயவாடாவில் என் முன்னிலையில் இது ஜெகனுடையது, இது ஷர்மிளாவினுடையது என்று சொல்லி சொத்துக்களை பிரிக்க முடிவு செய்தார்கள். 2019ல் எழுதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுதான். இது ஜெகன், தானே எழுதி கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். ஷர்மிளாவுக்கு உரிமைகள் இருந்ததால், ஷர்மிளாவுக்கு 200 கோடி ரூபாய் ஈவுத்தொகையாக இருந்தது. அதனால்தான் அவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் ஜெகனின் அன்பளிப்பு அல்ல. இணைப்புகள் எதுவும் இல்லாததால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி பங்குகளில் 100% ஷர்மிளாவுக்கு தருவதாக ஜெகன் உறுதியளித்து கையெழுத்திட்டார்.

ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்திருந்தால், இந்த சொத்துப் பிரச்னை எழுந்திருக்காது, இதுபோன்ற சர்ச்சைகள் இருக்காது. தற்போது நடக்கும் குழப்பங்கள் இல்லாவிட்டால் நான் பேச வேண்டியதில்லை. இது என் குழந்தைகளுக்கும், மாநிலத்திற்கும் நல்லதல்ல. வளர்ந்த பிள்ளைகள் ஒத்துப்போகாமல் போகலாம். இதுதொடர்பாக எங்கள் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசியவர்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உண்மை இதுதான். இன்னும், அவர்கள் உடன்பிறந்தவர்கள். இது அவர்களின் பிரச்னை; அவர்கள் அதைத் தீர்ப்பார்கள். இதை நிறுத்துங்கள், பொறுப்பற்ற முறையில் பேசுவதைத் தவிர்க்குமாறு என் குழந்தைகளாகிய உங்கள் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் போர் | ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த ஷேக் நைம் காசிம்?

விஜயம்மாவின் கடிதத்திற்கு ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பதிலளித்துள்ளது. ”தாம் ஒருபோதும் சொத்துகளை திரும்பக் கேட்கவில்லை. தனது சொத்துகளை, சகோதரி ஷர்மிளாவுடன் நல்லெண்ணத்துடன் பகிர்ந்துள்ளோம். அவர், எங்கள் தொழில்கள் எதிலும் இயக்குநராக இல்லை. தாம், ஷர்மிளாவை அன்புடனேயே நடத்தினோம். மறைந்த முதல்வரும் தந்தையுமான ராஜசேகர ரெட்டி ஏற்கெனவே ஷர்மிளாவுக்கு சொத்துகளை மாற்றியுள்ளார். தாம், அந்த சொத்துகளை திரும்பக் கேட்கவில்லை, தனக்குத் தெரியாமல் ED வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை மாற்றுவது தொடர்பாக மட்டுமே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனப் பதிலளித்துள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி, ஷர்மிளா

கடந்த காலங்களில் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியோடு இணைந்து பயணித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, அவருடைய தேர்தல் வெற்றிக்கும் பங்களித்தார். பின்னர், ஜெகன் மோகன் முதல்வராக இருந்த சமயத்தில், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் உச்சம் தொட்டது. அதைத் தொடர்ந்து சகோதரரிடமிருந்து பிரிந்த அவர், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்து அதன் தலைவரானார். அடுத்து, அதையும் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா உள்ளார். இவருடன்தான் அவரது தாயார் விஜயம்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: IPL 2025: உறுதியான தோனி..? தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்? எமோஜிகளால் சஸ்பென்ஸ் வைத்த CSK!