ஆந்திரா - மாணவிகள் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியை முகநூல்
இந்தியா

ஆந்திரா: மாணவிகளின் தலைமுடியை வெட்டிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்; நடந்தது என்ன?

“மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” - என பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா விளக்கம்

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆந்திராவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் தங்கள் தலைமுடியை பின்னாமல் LooseHair விட்டபடி பள்ளிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அம்மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் இயங்கிவருகிறது கேஜிபிவி என்ற அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய் பிரசன்னா. சம்பவ தினத்தன்று, இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பயிலும் 18 மாணவிகள் தங்கள் தலைமுடியை பின்னாமல் LooseHair விட்டபடி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய் பிரசன்னா கோபமடையந்து அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போதும் தன் செயலுக்கு ஆசிரியர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து, அப்பள்ளி முதல்வரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை வைத்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த DEO இதுகுறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் இதுதொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், தலைமை ஆசிரியருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாணவி ஒருவர் உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கையில், “காலை நேர வழிப்பாட்டிற்கு தாமதமாக வந்த காரணத்தால் தலைமை ஆசிரியர் எங்களை அடித்தார். சுமார் இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்கச் செய்ததார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், தலைமை ஆசிரியர் பிரசன்னா இதுகுறித்து DEO-விடம் தெரிவிக்கையில் , “மாணவிகள் தலைமுடியை பின்னாமல் பள்ளி வளாகத்தில் பேசிக்கொண்டு சென்றனர். மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தேன்” என தான் செய்ததை நியாயப்படுத்தி பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மாணவிகளின் பெற்றோரையையும் குழந்தை நல ஆர்வலர்களையும் மேலும் கொதிப்படைய செய்துள்ளது.