ஆந்திரா மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.
அரசு நிர்வாகங்களை மூன்றாக பிரித்து அவற்றுக்கென தனித்தனியாக விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் ஆகிய மூன்று நகரங்களையும் ஆந்திராவின் தலைநகரங்களாக மாற்றுவதற்கான மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை திரும்ப பெறுவதாக ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதில் மாற்றங்களை கொண்டுவந்து புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.