இந்தியா

தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்தியது ஆந்திரா

தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்தியது ஆந்திரா

webteam

கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு தற்காலிகமாக நிறுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாற்றின் கிளை நதியான குசா நதி கால்வாயில் 5 தடுப்பணைகள்  கட்ட ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார். "அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதில் தாமதம் காட்டாமல், தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தமிழக மற்றும் ஆந்திர அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில் கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.