இந்தியா

ஓடும் கண்டெய்னரில் ரூ.80 லட்சம் மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை

ஓடும் கண்டெய்னரில் ரூ.80 லட்சம் மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை

webteam

ஓடும் கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

ஓடும் கண்டெய்னர் லாரியில் கொள்ளையடிக்கும் எத்தனையோ காட்சிகளை சினிமாவில் பார்த்திருக்கலாம். அப்படி ஒரு காட்சி உண்மை சம்பவமாக ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூரில் உள்ள ஸ்ரீ நகரத்தில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள செல்போன்கள், நோட் பேட்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று கொல்கத்தாவிற்கு சென்றுள்ளது.

நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்ட லாரி இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்க்கில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது கண்டெய்னரின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் வந்து விசாரணை செய்ததில் கண்டெய்னரில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கொள்ளை சம்பவத்தை ஒரு கும்பல் அரங்கேற்றியிருப்பதும், நவீன உபகரணங்களுடன் ஓடும் கண்டெய்னரில் ஏறிய கும்பல், கதவை உடைத்து உள்ளே நுழைந்ததையும் ஆய்வின் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். அத்துடன் பெரிய பைகளைக் கொண்டு போன்கள், நோட் பேட்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.