இந்தியா

''தினமும் ஒருமணி நேரம் மக்களுடன் சந்திப்பு'' - அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி

''தினமும் ஒருமணி நேரம் மக்களுடன் சந்திப்பு'' - அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி

webteam

மக்களை தினம் தோறும் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்த மனுக்களை நேரடியாக பெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நாளை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் திட்டம், மாநில போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் என்ற முடிவு, காவலர்களுக்கு வார விடுமுறை என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் வரிசையில் தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் பாணியான மக்களை தினம் தோறும் நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியை நாளை முதல் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகம் செய்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் தர்பார் என பெயரிடப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை அல்லது 8 மணி  முதல் 9 மணி வரை மக்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது என ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார். மனுக்கள் வழங்க வரும் மக்களுக்காக காத்திருக்கும் அறை, சாப்பாடு வசதி, குடிநீர் வசதி, கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காக தனி அறை, பால் விநியோகம் உள்ளிட்ட வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையான ராஜசேகர ரெட்டி, தான் முதலமைச்சராக பதவிவகித்த நாட்களில் தினம் தோறும் மக்களை சந்தித்து மனுக்களை வாங்கி வந்தார். தற்போது ஜெகன் மோகனும் அவரது தந்தை வழியை பின்பற்றி மக்கள் தர்பார் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்.