இந்தியா

மத்திய அமைச்சராக இருக்க தகுதியற்றவர் ஹெக்டே, உடனே நீக்க வேண்டும்: ராகுல் காந்தி ஆவேசம்

மத்திய அமைச்சராக இருக்க தகுதியற்றவர் ஹெக்டே, உடனே நீக்க வேண்டும்: ராகுல் காந்தி ஆவேசம்

webteam

’’மத்திய அமைச்சராக இருக்க தகுதியற்றவர் அனந்தகுமார் ஹெக்டே. அவரை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சராக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியை சேர்ந்த அவர், அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அரசியலமைப்பை மாற்றுவதாகவும், நாங்கள் இருப்பதே அதை மாற்றுவதற்காகத்தான் என்றும் இவர் பேசிய பேச்சு, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களுக்கு பெற்றோர்கள் இல்லை என்று கூறியும் சர்ச்சையை கிளப்பி இருந்தார். 

இந்நிலையில் குடகு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’’நமது சிந்தனையில் அடிப்படை மாற்றம் இருக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்து பெண்கள் மீது யாராவது கையை வைத்தால், அவர்கள் கை யை வெட்டுங்கள்’’ என்று ஆவேசமாகக் கூறினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, ‘’நீங்கள் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்து கர்நாடகாவுக்கு என்ன செய்திரிகள். கர்நாடகா முன்னேற்றதுக்கு உங்கள் பங்களிப்பு என்ன? உங்களை பற்றி எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியும். இதுபோன்றவர்கள் எம்.பிக்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பது வருந்ததக்கது’’ என்று கூறியிருந்தார். 

அதற்கு அனந்தகுமார் ஹெக்டே தனது “இவர் என்ன சாதனைகளை செய்துவிட்டார் என்று கூறினால், இவருக்கு பதில் சொல்கிறேன். இவர், ஒரு முஸ்லிம் பெண்ணின் பின்னால் ஓடியவர் என்பது மட்டும் எனக்கு தெரியும்” என்று கூறி இருந்தார்.

(மனைவி தபுவுடன் தினேஷ் குண்டு ராவ்)

இதனால் ஆவேசமடைந்த, குண்டுராவின் மனைவி தபு, ‘’மத்திய அமைச்சர் இப்படி கூறியிருப்பதன் மூலம் என்னையும் குடும்பத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார். இதை அவருக்கு டேக் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர் என்னை பிளாக் செய்துவிட்டார்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’’அனந்தகுமார் ஹெக்டே, ஒவ்வொரு இந்தியரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறார். அவர் மத்திய அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர். அவரை உடனடியாக நீக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.