முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நிச்சயமான நாளில் இருந்து முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் இரண்டு முறை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று மும்பையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் பகுதியில் இருந்து வந்த 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முகேஷ் அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற திருமண விழாவில், புதுமண தம்பதியனர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 800 பேர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக, புதுமண தம்பதிகளுக்கு தங்கத்தாலான மாங்கல்யம், மோதிரங்கள், மூக்குத்தி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரங்கள் மற்றும் நெக்லெஸ் உள்ளிட்ட பரிசுகளை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
இதுதவிர, ஒவ்வொரு புதுமண தம்பதிக்கும் ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கு காசோலை சீதனமாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓராண்டுக்கு தேவையான அளவிற்கு மளிகை சாமான்கள், பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்ஸி, ஃபேன், மெத்தை உள்ளிட்டவைகளையும் சீதனமாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வழங்கியிருக்கின்றனர்.
தொடர்ந்து திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர் வார்லி பழங்குடியினத்தவரின் பாரம்பரிய டார்பா நடனமும் நடைபெற்றது. வரும் நாட்களிலும் இதுபோன்ற திருமணங்களை நடத்தி வைக்க உள்ளதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்தனர்.