தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. பின் கடந்த அக்.16ஆம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கின் முக்கியத்துவம் கருதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் (அக்.31) விசாரணைக்கு வந்தது. அப்போது வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ’தேர்தல் பத்திரத்தின் திட்டம், அரசியல் கட்சிகளின் உண்மைத்தன்மையை குடிமக்கள் அறியக்கூடிய அடிப்படை உரிமையை மீறுகிறது’ என தெரிவித்தார்.
’தேர்தல் பத்திரங்கள் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறது’ என வழக்கறிஞர் கபில் சிபில் குற்றஞ்சாட்டினார். ’தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தின்கீழ் உள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகக் கூற முடியாது’ என அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதித்தார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மிகப் பெரிய அளவில் தேர்தல் நிதி வழங்க விரும்பும் நபர், அதை ஒரே ஆளாக வங்கியில் செலுத்தமாட்டார். எவ்வளவு தூரம் அதனை பிரித்தளிக்க முடியுமோ அந்தளவுக்கு அதனை பிரித்தளிப்பார். இதனால், அந்தப் பெருந்தொகைக்கான உண்மையான உரிமையாளர் யார் என்பது கடைசிவரை தெரியாமல் போகும் அல்லவா?" என்று வினவினார்.
அப்போது சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, "இதுபோன்ற தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்” என்றதுடன், ஆளுங்கட்சியே அதிக நிதி பெறுகிறது என்ற மனுதாரரின் வாதத்துக்கும் பதிலளித்தார். "ஆளுங்கட்சிக்கே நிறைய நிதி வருகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் நான் அதை ஆமோதிக்கிறேன். ஆனால், அது என் கருத்தே தவிர, அது அரசாங்கத்தின் பதில் இல்லை.
தேர்தல் நிதியின் பின்னால் இருக்கும் சூட்சமத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் நிதி வழங்கும் பெரும் புள்ளி ஒருவர், இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனக்கு சாதகமாக இருக்கும் என நினைத்திருக்கலாம். அதனால் கொடுக்கலாம். நிதி கொடுப்பவர்கள் யாரும் அதை தானமாகத் தரவில்லை. அவர்கள் அதிலும் வியாபாரம்தான் செய்கின்றனர். ஒரு தலைவர் எவ்வளவு தூரம் சக்திவாய்ந்தவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தொழில் நடத்துவதில் சுமுகத் தன்மை ஏற்படும் என்பதை கணித்து அவர்கள் நிதி கொடுக்கிறார்கள்” என்றார். மேலும், ஏடிஆர் ஆய்வறிக்கை ஒன்றையும் வாசித்தார். இதையடுத்து, நேற்றைய வாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இனி என்ன நடக்குமென்பது இன்றைய நாளின் இறுதியிலேயே தெரியவரும்.
அதன்முன் தேர்தல் பத்திரம் பற்றி அறிந்துகொள்வோம்...
தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்த நிலையிலதான் கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்த தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டது.
இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்தப் பத்திரங்களை, குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும்.
இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும்.1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.
கார்ப்பரேட் நிறுவனங்களால் வாரி வழங்கப்படும் இந்த நன்கொடையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அது கறுப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இத்திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க உதவுவதற்கே உருவாக்கப்பட்டது. ஆளும் கட்சி அதிகமான நன்கொடைகள் பெறுவதற்கான திட்டம் இது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுடன் வழக்கும் தொடர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த 2016-17 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரம் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2016-17 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 16,437 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இவை ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 24 மாநில கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த தொகையில் 9,188 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு 5,272 கோடி ரூபாயும் காங்கிரஸுக்கு 952 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. அதாவது 57 சதவீதம் பாஜவுக்கும் 10 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது. மீதித் தொகை இதர கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.