பதவியேற்ற முகமது யூனுஸ் pt web
இந்தியா

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு

PT WEB

வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு கலவரம் காரணமாக அந்நாட்டு அரசு கவிழ்ந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இச்சூழலில், அந்த நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு பதவியேற்கும் என அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்தார். அதன்படி, நோபல் பரிசு வென்றவரான பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நேற்று பதவியேற்றுள்ளது. இதற்காக பிரான்ஸில் இருந்து வங்கதேசத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த முகமது யூனுஸ், அந்நாட்டு அதிபர் மற்றும் ராணுவ தளபதியைச் சந்தித்தார். இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்களை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கதேசத்தில் இன்னும் வன்முறைகள் தொடர்கின்றன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களை குறிவைத்து சூறையாடல்களும், வன்முறைகளும் நீண்டுகொண்டிருக்கின்றன. ஷேக் ஹசீனா வெளியேறி மறுநாள் மட்டுமே வங்கதேசத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஜூலை மாதத்தில் இருந்து வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.