அமுல் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கைத் தற்காலிகமாக அந்நிறுவனம் ஒருநாள் வரை முடக்கியது தற்போது தெரியவந்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு டிக்டாக் செயலியை இந்தியாவில் தடைசெய்யக் கோரியும் அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்க வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அதற்காக டிக்டாக்கின் ஸ்டார் ரேட்டிங்கை குறைத்து மதிப்பிட்டும் கூறினர். இதற்கு கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது, மேலும் பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டுகிறது எனப் பல காரணங்களை முன்வைத்தனர்.
வேறு சிலர் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் விதமாக மொபைல் ஃபோன்களில் உள்ள சீன செயலிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி கோஷம் எழுப்பினர். அதற்காக பிரத்யேக செயலியை உருவாக்கி, அதனை இன்ஸ்டால் செய்வதன் மூலம் மொபைலில் உள்ள அனைத்து சீன செயலிகளும் செயலிழக்க வைக்கும் முடியும் என்றனர். அதன்மூலம் சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்கக்கூறி பிரச்சாரத்திலும் இறங்கினர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
தற்போது நடந்து வரும் இந்திய-சீன எல்லை பிரச்னைதான் என்று சொல்லப்படுகிறது. லடாக்கில் உள்ள இந்திய- சீன எல்லையில் உருவெடுத்த பிரச்னை, இருநாட்டுத் தலைவர்களும் பேசி தீர்க்கக் கூடியது. ஆனால் அந்நாட்டுத் தயாரிப்புகளைப் புறக்கணிப்பதுதான் தீர்வா? என்பது பலரின் கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பால் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான அமுல் கடந்த ஜூன்3 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. அந்தக் கேலிச்சித்திரத்தில் ”EXIT THE DRAGON” என்ற வாசகத்துடன் டிராகனை நோக்கி, அமுல் பேபி ஒன்று ஆக்ரோஷமாகக் கையை நீட்டி இருப்பது போன்றும், அந்த டிராகனுக்கு பின்புறம் “TIK TOK” செயலியின் சின்னமும் இடம் பெற்றுள்ளதைப்போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கூடவே அமுல் “MADE IN INDIA” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதனால் அமுல் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு ஜூன்4 ஆம் தேதி மாலை அந்நிறுவனத்தால் முடக்கப்பட்டது. சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கார்டூன் வெளியிட்டதாலேயே அமுல் நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்டது எனப் பலரும் குற்றம்சாட்டினர். பிறகு அமுல் நிறுவனம் கேட்டுக்கொண்டதால் மீண்டும் ஜூன்5 ஆம் தேதி காலை வழக்கம் போல் அமுலின் கணக்கு மீட்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
இந்தச் சர்ச்சை குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது பாதுகாப்பு நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். சீன செயலிகளைச் செயலிழக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்தியச் செயலியை (Remove China Apps) கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.