இந்தியா

அமிர்தசரஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு: ரயில்வே விளக்கம்

webteam

ரயில்வேயின் இடத்துக்குள் மக்கள் கூடிநிற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறாததே ரயில் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாகச் சென்ற ரயில் அவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விட்டுச் சென்றது. 

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல்கள் நேற்றிரவு வெளியாகின. இந்நிலையில், உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்‌சர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தசரா விழாவில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அவர் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து பற்றி டெல்லியில் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் கூடி நிற்பது அப்பட்டமான விதிமீறல் என்று தெரிவித்தனர். ரயில் பாதையை ஒட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கான எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை என்றும், இந்த விபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என்றும் அவர்கள் கூறினர். 

பஞ்சாப் அமைச்சரின் மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்கு தெரிந்திருக்கும் என்றும், அதுதொடர்பாக ரயில்வேக்கு தெரிவிக்காதது நிர்வாகத்தின் தவறு என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விபத்துக்கு உள்ளூர் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர்கள், விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், எங்கும் புகை சூழ்ந்திருந்ததாலும் மக்கள் கூட்டத்தை ரயில் ஓட்டுநரால் பார்த்து உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர். எனினும், உடனடியாக ரயில்வே மருத்துவக் குழுக்கள், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவினர் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.