நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான வேட்பு மனு பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன்படி, பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நடிகை நவ்நீத் கவுர் ராணா இந்த முறை பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற நடிகை நவ்நீத், நேற்று இரவு தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் அதே தொகுதியில் நவ்நீத் மீண்டும் போட்டியிட உள்ளார்.
நவ்நீத், பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக துணையுடன் ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே கட்சியின் ஆதரவாளரும் முன்னாள் எம்பியுமான ஆனந்தராவ் அட்சுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர்தான், கடந்த தேர்தலில் நவ்நீத் கவுர் ரானாவிடம் தோல்வியுற்றவர் ஆவார். இந்த முறை அந்தத் தொகுதியில் தனக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என அட்சுல் எதிர்பார்த்த நிலையில்தான் பாஜக, நவ்நீத் கவுருக்கு சீட் வழங்கியுள்ளது.
நவ்நீத்தை எதிர்க்கும் அட்சுல், "அவரை எதிர்த்து நான் நிச்சயம் போட்டியிடுவேன். என் கட்சி (ஏக்நாத் சிவசேனா) எனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், நான் அவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவேன். எந்த வகையிலும் அவருக்கு ஆதரவளிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிலளித்த நடிகை நவ்நீத், “400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதில் அமராவதி தொகுதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் (அட்சுல் மற்றும் கடு) என்னைவிட மிகவும் மூத்தவர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையாக இருந்து எனது வேட்புமனுவை ஆதரிக்க விரும்புகிறேன். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு எனக்கு மக்களின் ஆதரவு தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
நவ்நீத்துக்கு பிரஹர் ஜனசக்தி கட்சியின் (பிஜேபி) பச்சு கடுவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவரும் மாநில பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படமான ’தர்ஷன்’ மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், ’சீனு வசந்தி லட்சுமி’, ’சேத்னா’, ’ஜெகபதி’, குட் பாய், ’பூமா’ போன்ற படங்களில் நடித்தார். கரீனா கபூர் நடித்த ஹிந்தி படமான ’சமேலி’யின் ரீமேக்கான ’ஜபிலம்மா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். மேலும் அவர் மம்முட்டி, ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபலமான நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில், ’அரசாங்கம்’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படங்களில் நடித்திருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, ரவி ராணாவை திருமணம் செய்ததன்மூலம் அரசியலில் கால்பதித்தார். ரவி ராணா பாஜக ஆதரவாளர். அவரும் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். 2014 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர், 2019இல் சுயேட்சையாக களமிறங்கி சிவசேனாவின் ஆனந்த்ராவ் அட்சுலை 36,951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இவர்மீது போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டியல் வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழை பெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நவ்நீத் ராணா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நவ்நீத் ரானாவின் சாதி சான்றிதழை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக அறிவித்த நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.