அமித்ஷா முகநூல்
இந்தியா

“வங்கதேசத்தில் 27 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இன்று 9 சதவீதமாக குறைந்துள்ளது” - அமித்ஷா

வங்கப்பிரிவினை நடந்தபோது வங்கதேசத்தில் 27 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இன்று 9 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

PT WEB

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அகதியாக இருந்த 188 பேருக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பஙகேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா. "குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது நம் நாட்டில் குடியேறிய கோடிக்கணக்கான மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல் நீதியையும் உரிமைகளையும் வழங்குவதாகும். முந்தைய அரசுகளின் சில கொள்கைகள் காரணமாக, 1947ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் தஞ்சமடைந்த மக்களுக்கு உரிமையும் நீதியும் கிடைக்கவில்லை. இந்த மக்கள் அண்டை நாடுகளில் மட்டுமல்லாது இங்கும் துஷ்பிரயோகங்களை சகிக்க வேண்டியிருந்தது. இதனால் இந்த மக்கள் மூன்று தலைமுறைகளாக நீதிக்காக ஏங்குகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் கொள்கையால் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்த மக்களுக்கு நீதியை வழங்கியுள்ளார்.

பிரிவினை நடந்தபோது வங்கதேசத்தில் 27 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். இன்று 9 சதவீதம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மீதமுள்ள இந்துக்கள் எங்கே போனார்கள்?அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வங்கப் பிரிவினை

இந்தியாவை பொறுத்தவரை, எங்கள் இடத்திற்கு (இந்தியாவிற்கு) வந்தவர்கள் சுயமரியாதையுடனும் அவர்களின் விருப்பப்படி மதத்தை கடைப்பிடிப்பதற்கும் தகுதியானவர்கள். ஆகவே அவர்கள் பிற நாட்டில் கண்ணியமாக வாழ முடியாவிட்டாலும், எங்கள் நாட்டில் அவர்கள் அப்படி நடத்தப்பட மாட்டார்கள். இது நரேந்திர மோடி அரசு, இந்த அரசில் இவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.

சட்டம் மக்களுக்கானது, சட்டத்திற்காக மக்கள் அல்ல. சிஏஏ சட்டத்தை கொண்டு வருவோம் என்று 2014-ல் வாக்குறுதி அளித்தோம். சொன்னது போலவே 2019-ல் மோடி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நீதி கிடைக்காத கோடிக்கணக்கான இந்துக்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த சட்டம் 2019 இல் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் மக்களைத் தூண்டிவிட்டு அது முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் என்று பொய் தகவல்கள் பரப்பப்பட்டன.

சிஏஏ பற்றி நாட்டில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. இந்து, ஜெயின், சீக்கிய, புத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இன்றும் சில மாநில அரசுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. நாடு முழுவதும் உள்ள அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம். இது அவர்களின் வேலைகள், வீடுகள் போன்றவற்றை பழையபடி அப்படியே வைத்திருக்கும்” என்றுள்ளார்