மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா File image
இந்தியா

மூன்றாவது முறை மோடி பிரதமராக பதவியேற்கப் போவது உறுதி - அமித் ஷா நம்பிக்கை

2024ஆம் ஆண்டில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்கப் போவது உறுதியான ஒன்று என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

webteam

ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அமித் ஷா அளித்த பேட்டியில் “கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரிய வெற்றியை பாரதிய ஜனதா கட்சி பெறும்.

PM Modi

அண்மையில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களிலும் நல்ல தொண்டர்களை முதலமைச்சர்களாக கட்சி தேர்வு செய்துள்ளது. கட்சியின் சாதாரண தொண்டர்கள்தான் அதன் மிகவும் மதிப்பு வாய்ந்த உறுப்பினர்கள்” என்றார்.

முன்னாள் முதல்வர்கள் சிவ்ராஜ்சிங் சவுஹான், ராமன் சிங், வசுந்தரா ராஜே உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட தலைவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை தேர்வு செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “அந்த தலைவர்கள் அனைவரும் கட்சி அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கும் வரை சாதாரண தொண்டர்களாக இருந்தவர்கள்தான்” என கூறினார்.

மேலும் பேசுகையில், “நாட்டை மகத்தான நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புவதால் அவர் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டிருக்கிறோம்.

மோடி தமக்காகவோ, கட்சிக்காகவோ எதுவும் செய்ததில்லை. மோடி செய்வது அனைத்தும் நாட்டுக்காகவும், ஏழை மக்களுக்காகவுமே.
அமித் ஷா

சில கடுமையான முடிவுகள் எடுக்க நேர்ந்த போது பாரதிய ஜனதா தொண்டர்களே அது கட்சிக்கு பாதகமாக இருக்கும் என கருதினர். இருப்பினும் பிரதமர் மோடி அந்த கடுமையான நடவடிக்கைகளை நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுத்தார். இதனால்தான் இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து செயலாற்றி வருகிறது” என்றார்.

Narendra Modi

எதிர்க்கட்சிகளின் I.N.D.I. கூட்டணி குறித்து கடுமையான விமர்சனத்தை முவைத்த அமித் ஷா, இந்தியா கூட்டணி இந்தியாவில் செய்தி தொலைக்காட்சிகளை தவிர வேறு எங்கும் காணப்படவில்லை என்றார்.

பின் “பொது சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியுடன் இருக்கின்றனர். அரசமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள பொது சிவில் சட்டத்தை, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி கைவிட்டுவிட்டது. அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்பதே மதசார்பற்ற அரசின் மிகப்பெரிய அடையாளம்.

வடக்கு தெற்கு என எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. பாரதிய ஜனதா அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றும் அமித் ஷா தெரிவித்தார்.