மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு pt web
இந்தியா

“சிஏஏ ஒருபோதும் திரும்பப் பெறப்படமாட்டாது” - எதிர்க்கட்சிகள் எதிர்த்த நிலையில் அமித்ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “சிஏஏ ஒருபோதும் திரும்பப் பெறப்படமாட்டாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Angeshwar G

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமையில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எதிப்பினை பதிவு செய்திருந்தார். அவர் கூறுகையில், “மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற எந்த வகையிலும் அரசு இடமளிக்காது நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை. சிஏஏ சட்டம் தொடர்பாக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இந்தச்சட்டம் மத்திய அரசின் கீழ் வருவதால் அமல்படுத்தமாட்டோம் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை. எதிர்க்கட்சியினர் வாக்குறுதி மட்டுமே கொடுப்பார்கள், ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிஏஏ குறித்து நான் 41 முறை வெவ்வேறு தளங்களில் பேசியுள்ளேன். சிறும்பான்மையின மக்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த ஒரு குடிமகனின் உரிமைகளையும் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இல்லை என்பது குறித்தும் பேசியுள்ளேன். ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் ஜெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றனர். சிஏஏ குறித்து 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சிஏஏ சட்டம் இந்த நாட்டைச் சேர்ந்த எந்த குடிமக்களின் உரிமையையும் பறிக்காது என மீண்டும் உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சிஏஏ மூலம் சிறும்பான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா குற்றம்சாட்டியிருந்த நிலையில், “மம்தா ஜி-யிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் செய்ய பல தளங்கள் உள்ளன. வங்கதேசத்தில் இருந்து வரும் வங்காள இந்துக்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். சட்டத்திருத்தத்தில் எந்தவொரு இந்தியரின் குடியுரிமையையும் பறிக்கும் ஷரத்து ஒன்றை காட்டுமாறு சவால் விடுகிறேன். வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதற்காக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குவதே அவரது நோக்கம்” என தெரிவித்துள்ளார் அமித்ஷா.