இந்தியா

விவசாய பிரதிநிதிகளுடன் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

விவசாய பிரதிநிதிகளுடன் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

webteam

டெல்லியில் போராடும் விவசாயிகளின் தேர்ந்தெடுத்த சில பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இன்று விவசாயிகள் அரசு இடையே ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அரசு ஐந்து கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் விவசயிகளுடன் அரசின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் 13 தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வேளாந்துறை அமைச்சர் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்துறை இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிஷான் சபாவின் பொதுச் செயலாளர் ஹனான் மொல்லா, வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்படாது என உள்துறை அமைச்சர் தெளிவு படுத்தியதாக கூறினார். சட்டங்களில் என்ன திருத்தங்கள் செய்ய அரசு தயாராக இருக்கிறது என்பதை எழுத்துவடிவில் தருவதாக அமித்ஷா கூறியதாக ஹனான் கூறினார்.

அரசு எழுத்துவடிவில் அளிக்கும் திருத்தங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரசுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஹனான் கூறினார். ஆனால் அதே நேரம் சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும் என்றும் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் அமித் ஷாவுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் மத்தியில் இன்றைய பேச்சுவார்த்தை குறித்து இருவேறு கருத்துகள் காணப்பட்டது. ஒரு சிலர் இன்றைய பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப் போவதாக கூறிய நிலையில், வேறு சிலர் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பது போன்ற கருத்துகளை வெளியிட்டனர். அரசு முன்வைக்கப்போகும் திருத்தங்கள் என்ன, அவற்றை விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இன்று தெரியவரும்.