அமித் ஷா, தமிழிசை எக்ஸ் தளம்
இந்தியா

தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலா? மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா.. #ViralVideo

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது மேடையிலேயே தமிழிசையை, அமித் ஷா கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

18-வது மக்களவைத் தேர்தலின்போது ஆந்திரப் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்குதேசம் மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார். அப்போது அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார்.ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால், தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுதொடர்பாக கட்சித் தலைமை இரு தரப்பிலிருந்தும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ஒடிசா| அரியணையில் ஏறும் பாஜக முதல்வர்.. அரசு இல்லம் தேடும் பணி தீவிரம்!

முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த தமிழிசை சவுந்தரராஜன், ”நான் கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரவுடிகள்போல இருப்பவர்களை கட்சிக்குள் விடமாட்டேன்.

ஆனால் இப்போது அப்படியல்ல. கட்சியில் இப்போது ரவுடிகள் சேர்ந்து உள்ளனர். கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். மாநில தலைவர் சரியாகத்தான் இருக்கிறார். அவரின் நடவடிக்கை வேறு” என அண்ணாமலை குறித்து மறைமுகமாகப் பேசியிருந்ததுதான் உட்கட்சிப் பூசலுக்குக் காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: ஜெய்ப்பூர்| ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்கப் பெண்!