மத்திய அமைச்சர் அமித் ஷா புதிய தலைமுறை
இந்தியா

“I.N.D.I.A. கூட்டணி மோசடிக் கூட்டணி” - அமித் ஷா விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படும் என ராகுல் காந்தி பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

PT WEB

பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பேரணி சென்று வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

அப்போது பேசிய அவர், ”I.N.D.I.A. கூட்டணி மோசடிக் கூட்டணி. காங்கிரஸ் தலைமையில் மோசடிக் கட்சிகள் இணைந்துள்ளன. மறுபக்கம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடிய தலைவர்கள் யாரேனும் I.N.D.I.A. கூட்டணியில் உள்ளனரா?.

பிரதமர் பதவியை சுழற்சி முறையில் அனுபவிக்க I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் எந்த வன்முறையும் நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படும் என ராகுல் காந்தி கூறுகிறார்.

அவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, 370ஆவது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படப் போவதும் இல்லை. ஆதலால் பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.