இந்தியா

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

webteam

ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மிகப்பெரிய அளவில் பத்திரிக்கை, ஊடகம், இணையதளங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.


தற்போது டெல்லியில் ஆக்சிஜனுக்கு பஞ்சமில்லை. ஆகையால் இந்த தருணத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இதன் மூலம் எந்தவொரு நோயாளியும் ஆக்சிஜன் தேவைப்படும்போது அதை இழக்கமாட்டார். அதே போல கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 3 மாதங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். மாவட்ட நீதிபதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் தினமும் 2 முதல் 4 கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று சோதனை செய்ய வேண்டும்.” என்றார்

டெல்லியில் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகள் ஆக்சிஜன் வசதி இல்லாமல் பலர் உயிரிழந்தனர். நாள் ஒன்று 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் நேற்று மத்திய அரசு சார்பில் இருந்து 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து இதே போல டெல்லிக்கு ஆக்சிஜனை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். டெல்லியில் இன்று 19,832 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 341 பேர் உயிரிழந்தனர்.