Manipur file
இந்தியா

"மணிப்பூருக்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம்” - அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

webteam

செய்தியாளர்: பால வெற்றிவேல்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த வருடம் மே மாதம் தொடங்கிய குக்கி மற்றும் மெய்தி இன குழுவினருக்கு இடையிலான வன்முறை மோதல், ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் 250க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதும் ஜிரிபம் போன்ற பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவுக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

manipur riot

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் நிலை 4 என்கிற 'பயணம் செய்ய வேண்டாம் மிக அதிக ஆபத்து உள்ளது' என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேகாலயாவிற்கு பயணத்தை மறு பரிசீலனை செய்வதற்கான நிலை 3 வழங்கப்பட்டுள்ளது.

அசாம் நாகலாந்து அருணாச்சல பிரதேசம் மிசோரம் சிக்கிம் திரிபுராவில் சமீப காலமாக நடந்து வரும் வன்முறை குறைந்து வரும் நிலையில் நிலை 2 என்கிற பட்டியலில் இந்த மாநிலங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது நிலை 2 பட்டியலில் இருக்கும் மாநிலத்திற்கு செல்பவர்கள் உரிய பாதுகாப்போடும் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலோடும் செல்ல வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தை பொருத்தவரை இன்னமும் வன்முறை குறையாத நிலையில் கொலை கடத்தல் பாலியல் வன்முறை போன்றவை ஏற்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக நிலை 4 என்கிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன அடிப்படையிலான உள்நாட்டு மோதல்கள் மற்றும் இந்திய அரசாங்க இலக்குகளுக்கு எதிரான வழக்கமான தாக்குதல்கள் காரணமாக மணிப்பூர் மாநிலத்திற்கு அடுத்த ஆறு மாதம் எந்த அமெரிக்க குடிமக்களும் செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்ல சிறப்பு அங்கீகாரம் தேவை என்பதினால் வெளிநாடுகளில் வன்முறை மோதல் இருக்கும் பகுதிகளில் நிலை வாரியாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதிபர் ஜோ பைடன்

இதில் நிலை 4 என்பதுதான் குடிமக்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அமெரிக்க குடிமக்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.