மகாராஷ்டிரா முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா | காட்டிற்குள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்கப் பெண்! தமிழ் முகவரியுடன் ஆதார்!

மகாராஷ்டிர மாநிலத்தின் காட்டிற்குள் மரத்தில் இரும்பி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர், மீட்கப்பட்டுள்ளார்.

PT WEB

மகாராஷ்டிர மாநிலத்தின் காட்டிற்குள் மரத்தில் இரும்பி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர், மீட்கப்பட்டுள்ளார்.அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் கார்ட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவரி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில், சோனுர்லி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் காட்டிற்குள் ஆடு மேய்க்க ஒருவர் சென்ற போது, பெண் அழும் சத்தம், கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் கார்ட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவரி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவரது அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் அருகிலேயே இருந்துள்ளது.

இந்தவகையில், லலிதா காயி குமார் என்ற அந்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதும், 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. தற்போது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களிடம் தான் பேசுவதை எழுதி காட்டி வருகிறார்.

தான் 40 நாட்களாக உணவின்றி தவித்து வந்ததாகவும், தனது கணவரே தன்னை மரத்தில் கட்டி வைத்து சென்றுள்ளதாகவும் அவர் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். தற்போது லலிதா காயி, கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உறவினர்களை தேடி தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு மகாராஷ்டிர காவல்துறையினர் விரைந்துள்ளனர்.