இந்தியா

நபிகள் குறித்த பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து - என்ன சொன்னது அமெரிக்கா?

நபிகள் குறித்த பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து - என்ன சொன்னது அமெரிக்கா?

ஜா. ஜாக்சன் சிங்

நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகியான அனில் ஜிண்டாலும் நபிகள் குறித்து அவதூறாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இது, இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், வளைகுடா நாடுகள் இந்தியாவை கண்டிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது. பிற இஸ்லாமிய நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அனில் ஜிண்டால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தும் கூறாமல் இருந்தது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அந்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், "இந்தியாவில் ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் நபிகள் நாயகம் அவதூறான கருத்தை தெரிவித்துள்ளனர். இதனை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. அதே சமயத்தில், அவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மனித உரிமைகள் பாதுகாப்பு விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இந்தியாவை ஊக்குவித்து வருகிறோம்" என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.