இந்தியா

அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - டர்பனை கழட்ட சொல்லி அட்டூழியம்

அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - டர்பனை கழட்ட சொல்லி அட்டூழியம்

ஜா. ஜாக்சன் சிங்

அமெரிக்காவில் இரண்டு சீக்கியர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இதில் காயமடைந்த அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்கனவே ஒரு சீக்கியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் நேற்று மாலை சீக்கியர்கள் இருவர் தங்கள் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில், அவர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டைகளை கொண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்கள் அணிந்திருந்த தலைப் பாகையையும் இளைஞர்கள் கழட்டி வீசினர்.

இந்த தாக்குதலில் சீக்கியர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஓடி வந்து அந்த இளைஞர்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள அமெரிக்க தூதகரம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நியூயார்க் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்நிகழ்வில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நியூயார்க்கில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினரிடம் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், நியூயார்க் நகரின் குயின்ஸ் பாரோ நகரில் வயது முதிர்ந்த சீக்கியர் ஒருவர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.